அமெரிக்கா மீது கடும் சினத்தில் சீனா ; சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது
மற்ற நாடுகளின் கப்பல்களை தன்னிச்சையாகக் கைப்பற்றும் அமெரிக்காவின் நடைமுறை சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுகிறது' என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
வெனிசுலாவில் இருந்து சீனாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு சென்ற கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: பிற நாடுகளின் கப்பல்களைத் தன்னிச்சையாகப் பறிமுதல் செய்வதன் மூலம், அமெரிக்கா சர்வதேசச் சட்டத்தை கடுமையாக மீறியுள்ளது.
சர்வதேசச் சட்டத்தில் அடிப்படையற்ற அல்லது ஐ.நா. பாதுகாப்பு சபையின் அங்கீகாரம் இல்லாத அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச சட்டவிரோதத் தடைகளுக்கு எதிராகவும், பிற நாடுகளின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எந்தவொரு நடவடிக்கைக்கும் எதிராகவும் சீனா நிற்கிறது.
வெனிசுலாவுக்கு மற்ற நாடுகளுடன் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை வளர்த்துக்கொள்ளும் உரிமை உண்டு. தனது நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் வெனிசுலாவின் நிலைப்பாட்டிற்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவு உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு லின் ஜியான் கூறியுள்ளார்.