மலையில் மோதி நொறுங்கிய விமானம்: தீவிரமாக பரவும் காட்டுத்தீ! சிக்கலில் மீட்புப்படையினர்
மலையில் மோதி நொறுங்கிய போயிங் 737 விமானம் (Boeing 737) விழுந்த இடத்தில் காட்டுத்தீ பரவியுள்ளதால், மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று புறப்பட்டது.
மேலும் குறித்த விமானத்தில் 133 பேர் பயணித்துள்ளனர்.
விமானம் குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதிக்கு மேலே 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மலைமீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் விமானம் விழுந்த மலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் விரைந்து சென்றுள்ளனர்.
விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விமானம் விழுந்த இடத்தில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
முதலில் 505 தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 450 தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். விமானம் விழுந்த பகுதியில் காட்டுத்தீ பரவியிருப்பதால், மீட்புப்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.