சீனாவில் களைகட்டும் 80வது ஆண்டு இராணுவ வெற்றி விழா கொண்டாட்டம்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் வெற்றியின் 80வது ஆண்டு நிறைவு விழா பெய்ஜிங் தலைநகரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
சீனாவின் முக்கிய இராணுவ அணிவகுப்பில் பங்கேற்க வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் நேற்று (02) பெய்ஜிங் வந்தடைந்தார்.
அவருடன் அவரது மகளும் ரயிலில் சீனா வந்தடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாட, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உட்பட ஈரான், கியூபா உள்ளிட்ட 26 நாட்டுத் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த 70 நிமிட நிகழ்ச்சியின் போது சீனாவின் மிகவும் மேம்பட்ட இராணுவ உபகரணங்கள் மற்றும் விமானங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.
"வரலாற்றை நினைவில் கொள்வோம், தியாகிகளை நினைவு கூர்வோம், பிரகாசமான எதிர்காலத்திற்காக அமைதியைப் போற்றுவோம்" என்பது இந்நிகழ்வின் முக்கிய கருப்பொருளாகும்.
ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போருக்கு பங்களித்த சர்வதேச நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிறப்பு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.
ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று இரவு (03) சிறப்பு கலை நிகழ்ச்சியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.