உலக தலைவர்களுடன் தொடர்ச்சியான பேச்சு ; சீனாவின் அரசியல் நகர்வு தீவிரம்
ஈரான் மீதான போர் உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் கடந்த ஒரு வாரமாகப் பல நாடுகளின் தலைவர்களுடன் தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இன்று காலை அபுதாபி பட்டத்து இளவரசர் முகமது பின் சயீத் மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, வியட்நாமின் உயர்மட்டத் தலைவர் தோ லாம் நான்கு நாள் பயணமாக இன்று சீனா வருகை தரவுள்ளார்.
மறுபுறம், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவைச் சந்தித்ததுடன், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.
ஈரானின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், அந்நாட்டின் மசகு எண்ணெயை அதிகளவில் வாங்கும் நாடாகவும் சீனா இருந்தபோதிலும், தற்போதைய போரில் சீனா ஏன் நேரடியான அல்லது தீவிரமான பங்கை வகிக்கவில்லை என்ற கேள்வி சர்வதேச அரங்கில் எழுந்துள்ளது.
சீனா தற்போதுவரை அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்து வருகிறது. சீனாவின் தற்போதைய மௌனமும் நிதானமும் ஒரு நுணுக்கமான இராஜதந்திர நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு மற்றும் கணிக்க முடியாத வெளியுறவுக் கொள்கைகளால் ஏமாற்றமடைந்த நாடுகளுக்கு, சீனா தன்னை ஒரு 'நம்பகமான மற்றும் நிலையான' கூட்டாளியாகக் காட்டிக்கொள்கிறது.
அமெரிக்காவைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்க விரும்பும் நாடுகளைத் தன் பக்கம் ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இந்தத் தருணத்தை சீனா பயன்படுத்திக் கொள்கிறது.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போரில் கவனம் செலுத்தி வரும் வேளையில், சீனா தனது இராஜதந்திர வலையை ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே விரிவுபடுத்தி வருவது சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுவதாக வெளிநாட்டு செய்திகளில் வெளியிட்டுள்ளது.