பாலஸ்தீன நாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது சீனா!
பாலஸ்தீன விவகாரத்தில் சீனாவின் உறுதியான ஆதரவையும் பங்களிப்பையும் பாலஸ்தீனத்திற்கான சீன அலுவலகத் தலைவர் சுன் ழென் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என 'வாஃபா' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா-பாலஸ்தீனம் இடையிலான இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மை உருவாக்கப்பட்டதன் 3-வது ஆண்டு நிறைவு பெறவுள்ள நிலையில், தூதர் சுன் ழென் ரமல்லாவில் உள்ள சீனத் தூதரகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
பாலஸ்தீன மக்களுக்குத் தேவையான மனிதநேய மற்றும் வளர்ச்சி உதவிகளைச் சீனா தொடர்ந்து வழங்கும் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்லச் சீனா தயாராக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

பாலஸ்தீன தலைவர்களுடனான சந்திப்புகளின் போது, பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் அநீதிகளின் பரிமாணத்தை நேரடியாக உணர்ந்ததாகத் தூதர் தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும், சுதந்திரமாக ஆட்சி செய்யவும் முழு உரிமை உண்டு என்ற சீனாவின் கொள்கை நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்தின் நியாயமான உரிமைகளுக்கு ஆதரவாக நின்று 'இரு நாடு தீர்வு' திட்டத்தை முன்னெடுக்கவும் சீனா தொடர்ந்து பாடுபடும் எனத் தூதர் சுன் ழென் உறுதியளித்தார்.