132 பேரை பலிவாங்கிய சீன விமான விபத்து
சீன விமான விபத்தில் அதில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் விமான நிறுவனங்களில் ஒன்றான ‘சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்று குன்மிங் நகரில் இருந்து குவாங்சு நோக்கி புறப்பட்டது.
இதன்போது விமானத்தில் 123 பயணிகள் 9 பணியாளர்கள் என மொத்தம் 132 பேர் பயணித்தனர். விமானம் அந்நாட்டின் ஷூவாங் மாகாணம் டென்ஜியான் கவுண்டிக்கு உட்பட்ட வுசோ என்ற நகரின் அருகே உள்ள மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது.
விமானம் மலையில் மோதி விழுந்தவுடன் அதில் மளமளவென தீப்பற்றி எரிந்ததனால் மலைப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர், ராணுவம், பொலிசார் என பல்வேறு பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மீட்பு பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து நடந்த இடத்தில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த விமானத்தில் பயணித்த நபர்கள் யாரும் இதுவரை உயிருடன் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தற்போதுவரை விமானத்தில் பயணித்த யாரும் உயிருடன் மீட்கப்படாததால் 132 பேரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.