கனடாவில் கிறிஸ்மஸ் தினத்தில் ஏற்பட்ட தீ விபத்து: 20 பேர் இடம்பெயர்வு
கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தில் உள்ள கோக்ரேன் (Cochrane) நகரின் நான்காம் அவென்யூவில் அமைந்துள்ள ஆன்டர்சன் ஹவுஸ் குடியிருப்பு கட்டிடம், கிறிஸ்மஸ் தினத்தில ஏற்பட்ட தீ விபத்தில் முழுமையாக அழிந்தது. இதில் வசித்து வந்த 20 பேர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் உடைகள் கிடைப்பதை உறுதி செய்ய, உள்ளூர் தன்னார்வலர்கள் உடனடியாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், இது ஒன்ராரியோ தீயணைப்பு விசாரணை அலுவலகம் மற்றும் ஒன்ராரியோ மாகாண காவல்துறை (OPP) ஆகியவற்றால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கோக்ரேன் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

“விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், தீ எவ்வாறு ஏற்பட்டது அல்லது சந்தேகத்திற்குரியதா என்பதைக் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது,” என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றபோது, கட்டிடத்தின் பல பகுதிகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததாகவும், மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் 20 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த தீயை முழுமையாக அணைக்க சுமார் 8 மணி நேரம் எடுத்ததாகவும், காலை 9 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கட்டிடத்திற்கு வெறும் மூன்று அடி தூரத்தில் இருந்த நகர மன்றக் கட்டிடத்தை பாதுகாக்க தீயணைப்புத் துறை தீவிரமாக செயல்பட்டது.
அகழ்வெந்திரத்தின் உதவியுடன் நகர மன்றத்தை காப்பாற்ற முடிந்தது. அதில் மிகக் குறைந்த சேதமே ஏற்பட்டுள்ளது,” என தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.
முழுமையாக அழிந்த ஆன்டர்சன் ஹவுஸ் கட்டிடத்தின் இழப்பு மதிப்பு குறித்து இன்னும் கணக்கிடப்படவில்லை.