ஒரே நகரில் 5,000 அப்பாவி மக்களை கொன்று குவித்த ரஷ்யா: கலங்கும் உக்ரைன்
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகளால் கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை 5,000 என நகர மேயர் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 40 நாட்கள் கடந்தும் நீடித்து வருகிறது. ரஷ்யாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கை பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் நீடிக்கலாம் என நேட்டோ தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டுமின்றி, உயிரபாயம் இருப்பதால் மக்கள் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கையும் துணை பிரதமரால் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், துறைமுக நகரமான மரியுபோலில் ரஷ்ய துருப்புகள் கொன்று குவித்த அப்பாவி மக்களின் எண்ணிக்கையை நகர மேயர் வெளியிட்டுள்ளார்.
மட்டுமின்றி, ரஷ்ய துருப்புகளால் தாக்குதலுக்கு இலக்கான நகரங்களில் அதிகாரிகள் தரப்பு ஆய்வு மேற்கொண்டு வருவதுடன், சர்வதேச சமூகத்திற்கு அதை அம்பலப்படுத்தவும் உக்ரைன் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, கீவ் நகரில் இருந்து சுமார் 24,000 வீரர்களை ரஷ்ய இராணுவம் பின் வாங்க வைத்துள்ளதாகவும், ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அனுப்பி வைத்து, அவர்களை மீண்டும் களமிறக்க ஆயத்தப்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரியுபோல் நகரை பொறுத்தமட்டில் 210 சிறார்கள் உட்பட மொத்தம் 5,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மருத்துவமனைகள், சிறார் காப்பகங்கள், நாடக அரங்கம் என ரஷ்ய குண்டுவீச்சுக்கு தப்பிய பகுதி ஏதும் இல்லை எனவும், 50 பேர்கள் உயிருடன் எரிந்து மரணமடைந்த சம்பவமும் மரியுபோலில் அரங்கேறியதாக நகர நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், தப்பிச் செல்ல வழியில்லாமல் 160,000 மக்கள் இன்னமும் மரியுபோலில் சிக்கியுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.