பாகிஸ்தானில் மீண்டும் பதற்றம் ; 76 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்கள் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த வன்முறை சம்பவத்தினால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த 40 பேர் மீது திடீரென மறைந்திருந்து தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

மண்டோரி சார்கெல் பகுதியில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 பேரும் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து, இதே மாவட்டத்தின் பகன் கிராம பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்தது.
துப்பாக்கி சூடு மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து, அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்று சமரசத்திற்கான போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தினார்கள்.

எனினும், நேற்று முன்தினம் மீண்டும் மோதல் வெடித்தது. கோஜாகரி, மதசாநகர் மற்றும் குஞ்ச் அலிஜாய் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து, வன்முறை சம்பவத்தினால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 76 ஆக உயர்ந்து உள்ளது. பலர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        