பெரும் மோசடி அம்பலம்; அமெரிக்காவில் இந்திய சகோதரர்களுக்கு 400 ஆண்டுகள் சிறைதண்டனை
அமெரிக்காவில் இந்திய சகோதரர்களுக்கு 400 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளி சகோதரர்களான பாஸ்கர் சாவானி மற்றும் அருண் சாவானி ஆகியோர் பல மில்லியன் டாலர் மோசடி வழக்குகளில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

தகுதியற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை
'சாவானி குரூப்' என்ற பெயரில் இவர்கள் நடத்திய வணிக நெட்வொர்க் மூலம் விசா மோசடி, மருத்துவக் காப்பீடு மோசடி, வரி ஏய்ப்பு மற்றும் பணமோசடி செய்ததாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து எச்-1பி விசா மூலம் பணியாளர்களை வரவழைத்து, அவர்களின் ஊதியத்தில் ஒரு பகுதியை திரும்ப பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், தகுதியற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளித்தது, போலி பல் மருத்துவ உபகரணங்களை நோயாளிகளுக்கு பயன்படுத்தியது ஆகிய குற்றங்களும் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெடிகேட் திட்டத்தில் சுமார் 30 மில்லியன் டாலர் மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கில் பாஸ்கர் சாவானிக்கு 420 ஆண்டுகளும், அருண் சாவானிக்கு 415 ஆண்டுகளும் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.