7 தமிழர் விடுதலை தொடர்பாக தமிழக முதல்வருடன் சட்டத்துறை அமைச்சர் ஆலோசனை
7 தமிழர் விடுதலை தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன், சட்டத் துறை அமைச்சர் ரகுபதி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரமும் இடம்பெற்றுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள்.
இவர்கள் 7 பேரையும் தமிழக அரசே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து முந்தைய அதிமுக அரசு இந்த எழுவர் விடுதலை குறித்து தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தமிழக அரசின் தீர்மானத்தை நிராகரித்துவிட்டார்.
எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர்தான் உண்டு என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துவிட்டார். எழுவர் விடுதலை குறித்து திமுக உள்ளிட்ட கட்சிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் எழுவர் விடுதலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் எழுவர் விடுதலை தொடர்பாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.