அமெரிக்க கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் ; ஹவுத்தி வெளியிட்ட காணொளியால் அதிர்ச்சி!
அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் ,அழிக்கப்பட்ட கடற்படைக் கப்பல்களுக்கு அருகில் மிதப்பதை சித்தரிக்கும் ஒரு அனிமேஷன் வீடியோவை ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கடல் கப்பல் போக்குவரத்துக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஏமனின் ஈரானுடன் இணைந்த ஹவுத்திகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை (15) முழு அளவிலான இராணுவத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளார்.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சபதம்
அதற்கு பதிலளிக்கும் விதமாக இந்த வீடியோக் காட்சி வெளியிடப்பட்டுள்ளதுடன், பழிவாங்குவதாகவும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சபதம் செய்தனர்.
சவுதி அரேபியாவின் எல்லையில் கிளர்ச்சியாளர்களின் கோட்டையான வடக்கு மாகாணமான சாதாவிலும், தலைநகர் சனாவில் சனிக்கிழமை இரவு முழுவதும் அமெரிக்கத் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.
2023 ஒக்டோபரில் காசாவில் போர் தொடங்கியதிலிருந்து ஹவுத்திகளுக்கு எதிரான மிக விரிவான தாக்குதல்களில் இந்த வான்வழித் தாக்குதல்களும் ஒன்றாகும். ஞாயிற்றுக்கிழமை ஈரானும் ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்து ஹவுத்திகளுக்கு உதவ மறுத்தது.
அதேவேளை ஈரானின் துணை இராணுவ புரட்சிகர காவல்படையின் தலைவர் ஜெனரல் ஹொசைன் சலாமி, ஹவுத்திகளின் தாக்குதல்களில் தனது நாடு ஈடுபடவில்லை என்று மறுத்தார்.
அத்துடன் பிராந்தியம் முழுவதும் அது கூட்டணி வைத்திருக்கும் போராளிக் குழுக்களின் “தேசிய அல்லது செயல்பாட்டுக் கொள்கைகளை அமைப்பதில் அது எந்தப் பங்கையும் வகிக்கவில்லை” என்று கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஆகியோருடன் ட்ரம்ப் தாக்குதல்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் படங்களையும் வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
ஏமனின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்திகள், 2023 நவம்பர் முதல் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து 100க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியதை அடுத்து பதில் நடவடிக்கையில் அமெரிக்க இராணுவமும் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.