கனடாவில் முன்கூட்டிய பனிப்பொழிவு குறித்து எதிர்வுகூறல்
கனடாவில் முன்கூட்டிய பனிப்பொழிவு தொடர்பில் எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கனடியர்கள் தங்களின் குளிர்கால ஜாக்கெட்டுகளை வழக்கத்தை விட விரைவாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை வழக்கமான அளவுக்கு விட குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளதால், இது அண்மைக் காலங்களில் மிக குளிர்ச்சியான நவம்பர் மாதமாக மாறக்கூடும் என வானிலை நிபுணர் கெல்சி மெக்யூயென் தெரிவித்துள்ளார்.

வான்வெளியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் காரணமாக இந்த குளிரான காலநிலை உருவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. அவரின் கூற்றுப்படி, வான்வெளியில் உருவாகியுள்ள “அப்பர் ட்ரஃப்” எனப்படும் ஜெட் ஸ்ட்ரீம் வீழ்ச்சி, கடுமையான குளிர் அலைக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.
இந்த நிலைமை நாடு முழுவதும் பரவலான குளிர் பரவலை ஏற்படுத்தியுள்ளது.
அதனுடன், கனடாவின் வடபகுதியிலிருந்து வரும் ஆர்க்டிக் காற்றும் குளிரை மேலும் அதிகரித்துள்ளது.
இரண்டும் சேரும் போது — குறிப்பாக நவம்பரில் — கடுமையான குளிர் காற்று தாக்குதல்கள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வார இறுதிக்குள் கனடாவின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் கடும் குளிரை அனுபவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.