யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழு
யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்கு வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஐவர் கொண்ட விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (31.05.2023) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்ற நிலையில், யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கருத்துரைத்துள்ளார்.
அதில், யாழ். மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் வடக்கு மாகாண சபையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானம் ஒன்று கிடப்பில் உள்ளது.
நீர் விநியோகம்
அதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனடிப்படையில் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக எனது (சி.வி.கே.சிவஞானம்) தலைமையில் ஐவர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவில் வடக்கு மாகாண சபையின் அவை தலைவர், ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கான இணைப்பாளர் பிரதமர் செயலாளர், நீர்ப்பாசன பொறியியலாளர் களப்பணிப்பாளர் உட்பட ஐவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழு நீர் விநியோகத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதோடு நாளை மறுதினம் (03.06.2023) முதலாவது கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |