முழுமையான செயற்கை இதயம்: அவுஸ்திரேலிய மருத்துவர் சாதனை
உலகின் முதன்முறையாக முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள அவுஸ்திரேலிய நபர் ஒருவர் மருத்துவ வரலாற்றைப் படைத்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸைச் சேர்ந்த 40 வயதுடைய குறித்த நோயாளி, அவுஸ்திரேலியாவில் இந்த முழுமையான செயற்கை இதயத்தைப் பெற்ற முதல் நபராக தானே முன்வந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார்.
அவருக்கு நவம்பர் மாதம் 22ஆம் திகதி செயற்கை இதயம் பொருத்தப்பட்டு பெப்ரவரி மாதம் அவர் வீடு திரும்பியுள்ளார். அதேவேளை மார்ச் மாத தொடக்கத்தில் அவருக்கு நடைபெற்ற மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு முன்பாக, BiVACOR சாதனத்துடன் அந்த நோயாளி 100 நாட்களுக்கு மேல் உயிர் வாழ்ந்ததை அடுத்து இந்த சாதனை படைக்கப்பட்டது.
செயற்கை இதயம்
இந்த சாதனை செயல்முறையை சிட்னியின் செயிண்ட் வின்சென்ட் வைத்தியசாலையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் போல் ஜோன்ஸ் மேற்கொண்டார்.
இதுபோன்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு அவுஸ்திரேலிய மருத்துவ மைல்கல்லில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுவதாக ஜான்ஸ் கூறினார்.
இந்த செயற்கை இதயம், இதய செயலிழப்புக்கு சிகிச்சையளிக்கும் போக்கையே மாற்றும் என்பதோடு 10 ஆண்டுகளில், தானம் செய்யப்பட்ட இதயங்களுக்காக காத்திருக்கவோ அல்லது பெறவோ முடியாதவர்களுக்கு இது ஒரு விருப்பமாக இருக்கும் என இதயநோய் நிபுணர் பேராசிரியர் கிறிஸ் ஹேவர்ட் தெரிவித்துள்ளார்.