நவால்னி கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம்!
விஷம் கொடுக்கப்பட்டு உயிர்தப்பிய ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி நாடு திரும்பியதும் உடனடியாக கைது செய்யப்பட்டார். ரஷிய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி. மேலும் ஊழலுக்கு எதிராக ஒரு அமைப்பை தொடங்கி அதன் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.
ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சைபீரியாவின் டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது நவால்னி திடீரென மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் அவர் கோமா நிலைக்கு சென்றார். நவால்னியை கொலை செய்ய அவர் குடித்த டீயில் விஷம் கலந்ததாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் ரஷியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டால் புதின் அரசால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தால் அவர் ஜெர்மனி அழைத்து செல்லப்பட்டார். அங்கு, தலைநகர் பெர்லினில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு அவருக்கு நினைவு திரும்பியதோடு உடல்நிலையும் தேறியது. இதற்கிடையில் நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. ‘நோவிசோக்’ என்கிற, ரஷியா பனிப்போர் காலத்தில் உருவாக்கிய ரசாயனம் கொடுக்கப்பட்டதாக ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
தன்னை கொலை செய்ய நடந்த இந்த முயற்சிக்கு ரஷிய அரசு தான் காரணம் என நவால்னி குற்றம் சாட்டி வரும் நிலையில் அதை ரஷியா தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த நிலையில் தான் முழுமையாக குணம் அடைந்து விட்டதால் இன்னும் ஓரிரு நாட்களில் ரஷியாவுக்கு திரும்ப இருப்பதாக நவால்னி கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். அப்படி அவர் ரஷியா வந்தால் உடனடியாக போலீசார் அவரை கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவின.
ஆனாலும் அதனை பொருட்படுத்தாத நவால்னி நேற்று முன்தினம் பொபெடா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் மூலம் ரஷியாவுக்கு புறப்பட்டார். நவால்னியின் மனைவி யூலியா, அவரது வக்கீல் மற்றும் பத்திரிகையாளர்கள் பலர் அவருடன் பயணம் செய்தனர்.
நவால்னி பயணித்த விமானம் மாஸ்கோவில் உள்ள வியானுகோவா விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால் விமானம் ஷெரெமெட்டியோ விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அப்போது நவால்னி தன்னுடன் இருந்த பத்திரிகையாளர்களிடம் ‘‘நான் கைது செய்யப்படுவேன் என எனக்கு தெரியும். நான் எதை கண்டும் பயப்படவில்லை’’ என கூறினார். அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் ‘‘நீங்கள் எனக்காகத் தான் இத்தனை நேரம் காத்திருக்கிறீர்களா?’’ என எல்லை பாதுகாப்புப்படை வீரர்களை பார்த்துக்கேட்டார் நவால்னி.
அதன் பின்னர் விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த போலீஸ் அதிகாரிகள் நவால்னியை கைது செய்து அழைத்து சென்றனர். நவால்னியின் வக்கீல் அவரோடு செல்ல அனுமதிக்கப்படவில்லை. நவால்னி மாஸ்கோவிலுள்ள ஒரு போலீஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கிறார். நவால்னியின் முக்கிய நண்பரான லுபொவ் சோபல் உள்பட பல செயற்பாட்டாளர்களும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே நவால்னி கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.