ஆஸ்திரேலிய அரசியலில் புதிய சர்ச்சை ; அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம்
அவுஸ்திரேலியாவில் திங்களன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது புர்கா அணிந்து போராட்டம் நடத்திய வலதுசாரி அரசியல்வாதி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக 71 வயதான பாலின் ஹேன்சன் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு நாடாளுமன்றமான செனட் சபையின் உறுப்பினரும் ஆவார்.
பொது இடங்களில் முகத்தையும் மூடும் வண்ணம் அணியும் 'புர்கா' மற்றும் பிற ஆடைகளை அணிவதைத் தடை செய்ய வேண்டும் என்ற சட்ட மூலத்தை பாலின் ஹேன்சன் கொண்டுவந்தார்.

இந்த சட்ட மூலம் வாக்கெடுப்பில் தோல்வியடைந்த பின்னர், மீண்டும் சபை கூடியபோது தனது ஆடைகளின் மேல் பர்தாவை அணிந்து வந்துள்ளார்.
இவர் அவுஸ்திரேலியாவில் முஸ்லிம் ஆடைகளுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வருகிறார். 2017 ஆம் ஆண்டும் இதேபோன்று செயற்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திங்கட்கிழமை எஞ்சியுள்ள காலத்திற்கு ஹான்சனை இடைநீக்கம் செய்தனர். பாலின் ஹேன்சன் மன்னிப்பு கேட்காமையினால் நாடாளுமன்றம் செவ்வாயன்று ஒரு கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி அவர் தொடர்ந்து ஏழு அமர்வுகளில் பங்கேற்க தடைசெய்தது.
அவுஸ்திரேலிய நாடாளுமன்றுக்கு புர்கா அணிந்து வந்த செனட்டர் பாலின் ஹேன்சனின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்த அரசாங்கத்தின் தலைமைச் செனட்டர் பென்னி வோங், இது “ஒரு முழு மதத்தையே கேலி செய்து அவமதிக்கும் செயல்” என தெரிவித்துள்ளார்.
வோங் மேலும் கூறுகையில், அவுஸ்திரேலியாவின் மொத்த 28 மில்லியன் மக்கள்தொகையில், அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் சுமார் ஒரு மில்லியன் பேர் உள்ளனர்; அவர்களின் நம்பிக்கைகளை இவ்வாறான செயல் துன்புறுத்துவதாகவும், சமூக ஒற்றுமையை பாதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.