இங்கிலாந்து பள்ளிமாணவர்களிடம் ஆசிரியர் கூறிய கருத்தால் சர்ச்சை
இங்கிலாந்து இடைநிலை பள்ளியில், ஷார்ட்ஸ் அணிந்த சிறுமிகள் துஸ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இங்கிலாந்தில் Northumberland, Rothburyயில் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் Dr Thomlinson Church of England Middle School-ல் நடந்துள்ளது. அப்பள்ளியில் வேலைபார்க்கும் பெண் ஆசிரியர் ஒருவர், பெண் குழந்தைகளிடம் உடற்கல்வி (physical education) வகுப்புகளுக்கு ஷார்ட்ஸ் அணியாமல், PE பாவாடை (PE Skirt) அணிந்து வருமாறு அறிவுரை கூறியுள்ளார்.
ஏனெனில், குட்டையான ஷார்ட்ஸ் அணிவது துஸ்பிரயோகத்திற்கான 'ஆபத்தை' ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், இந்த கோடையில் நீங்கள் மற்றவர்களால் குறிவைக்கப்படாமல் இருக்க பாவாடையை அணிந்துகொள்வது நல்லது எனவும் அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மாணவிகள் இதனை தங்கள் வீட்டில் கூற, ஆவேசமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்காக பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன், இது அந்த குறிப்பிட்ட ஆசிரியரின் கருத்து தானே தவிர, பள்ளியின் கருத்து அல்ல என்பதையும் தெளிவுபடுத்தியது.
மேலும்,சர்ச்சைக்குள்ளான குறித்த பெண் ஆசிரியர் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைத்து மன்னிப்பு கோரியதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.