யாழ்.குருநகரில் வாள்வெட்டுத் தாக்குதலில் உயிரிழந்த நபருக்கு கொரோனா!
யாழ்.குருநகரில் நேற்றுமுன்தினம் வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியில் திருச்சிலுவை சுகநல நிலையத்துக்கு அண்மையாக நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை வேறு இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் வழிமறித்து சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தினர்.
தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் குருதி வெள்ளத்தில் கிடந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களினால் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மூவரில் ஒருவரின் கால்கள் இரண்டும் கடுமையாக வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியது. அவர் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைதகவல்கள் தெரிவித்தன.
குருநகரைச் சேர்ந்த ஜெரன் (வயது -24) என்பவரே உயிரிழந்தார். இந்நிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் அவரது சடலம் யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் மின் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.