தண்ணீரை சேமிக்க ஈ - மெயிலில் பழைய செய்திகளை நீக்குமாறு உத்தரவு
பிரிட்டனில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் நிலையில், தண்ணீரை சேமிக்க, ' ஈ - மெயிலில் எனப்படும் மின்னஞ்சலில் உள்ள பழைய செய்திகளை நீக்கும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 1967க்கு பின் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள், ஆறுகள், குளங்களில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
பிரிட்டன் அரசின் விசித்திர உத்தரவு
இதற்கிடையே வெயிலும் சுட்டெரித்து வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, தேசிய வறட்சி குழு மூலம் பிரிட்டன் அரசு ஒரு புதிய ஆலோசனையை வழங்கியது.
தண்ணீரை சேமிக்க ஈ - மெயிலில் உள்ள பழைய செய்திகளை பொது மக்கள் நீக்க வேண்டும் என்பது தான் அந்த ஆலோசனை. இந்த உத்தரவு விசித்திரமாக தோன்றியது.
ஈ - மெயிலில் உள்ள பழைய செய்திகளை நீக்கினால் தண்ணீரை எப்படி சேமிக்க முடியும் என, பலரும் சமூக வலைதளங்களில் நையாண்டி செய்தனர். மேலும் சிலர், பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல், பழைய செய்திகளை நீக்கச் சொல்வது சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது என்றும் கருத்து தெரிவித்தனர்.
பிரிட்டன் அரசின் விசித்திர உத்தரவுக்கு பின்னால் ஒரு காரணமும் உள்ளது. நம் டிஜிட்டல் வாழ்க்கையின் முதுகெலும்பாக தரவு மையங்கள் உள்ளன. பிரிட்டனில் இந்த மையங்கள் ஏராளம். இந்த மையங்கள் நீர் சார்ந்த குளிரூட்டும் அமைப்புகளை பயன்படுத்துகின்றன. அங்கு ஆவியாவதற்கு பயன்படும் குளிரூட்டும் கோபுரங்கள் கணிசமான அளவு நீரை பயன்படுத்துகின்றன.
இதனால் நீர் தேவை அதிகரிக்கிறது. ஈ - மெயிலில், 1 எம்.பி., இணைப்புடன் உள்ள தரவுகள் கூட அதிகப்படியான தண்ணீரை பயன்படுத்துகின்றன. இதனால் பழைய செய்திகளை நீக்குவதால் கணிசமான நீரை சேமிக்கலாம் என, பிரிட்டன் அரசு நம்புகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.