மின் உற்பத்தியில் ஏற்பட்ட பாதிப்பால் இருளில் மூழ்கிய நாடு!
கியூபா நாட்டில் மின் உற்பத்தி பாதிப்பால் 11 மாகாணங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
கரிபீயன் தீவுநாடுகளில் ஒன்றான கியூபாவில் பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்கள் 40 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகின்றன.
இதனால் குறித்த மின்நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு நாடு தழுவிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (18-02-2023) தலைநகர் ஹவானாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் மடான்சாஸ் மாகாணத்தில் உள்ள மின் உற்பத்தி ஆலையில் பெரிய அளவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இது மின் உற்பத்தி மற்றும் வினியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக கியூபாவில் உள்ள 15 மாகாணங்களில் 11 மாகாணங்களில் மின்வெட்டு ஏற்பட்டு இருளில் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.
மின் வினியோகம் படிப்படியாக மீட்டமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த 13ஆம் திகதி கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ, மின் இணைப்புகளை சேதப்படுத்தியதால், நாட்டின் பாதிக்கும் அதிகமான பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் போனது குறிப்பிடத்தக்கது.