டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள H-1B விசா கட்டண உயர்வுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்துள்ள 'எச்1பி' விசா கட்டண உயர்வு மற்றும் விசா தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அமெரிக்காவின் 20 மாகாணங்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
ட்ரம்ப், குடியேற்ற விதிகளில் சமீப காலமாக மிகக் கடுமை காட்டி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தினார்.

மேலும், அமெரிக்கர்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வெளிநாட்டினர் எச்1பி விசா வாயிலாக முறைகேடாகத் தட்டிப் பறித்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, இந்திய மதிப்பில் 4.50 இலட்சம் ரூபாயிலிருந்து, 90 இலட்சம் ரூபாயாக அதிரடியாக உயர்த்தி, கடந்த செப்டம்பரில் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசியலமைப்பின்படி, ட்ரம்ப் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டங்களுக்குப் புறம்பாகத் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என கூறி, விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா, நியூயோர்க் உள்ளிட்ட மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 20 மாகாணங்கள் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளன. எச்1பி விசா வாயிலாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டுத் திறமையாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

விசா கட்டண உயர்வால் தங்கள் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் மாகாணங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், வெளிநாட்டு அறிஞர்களையே பெரிதும் நம்பியுள்ளன. எனவே இந்த கட்டண உயர்வால் அந்த நிறுவனங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளன.