ஜப்பான் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதல் ; 15 பேர் காயம்
மத்திய ஜப்பானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (26) நடத்தப்பட்ட கத்திக்குத்து மற்றும் திரவ வீச்சுத் தாக்குதலில் 15 பேர் காயமடைந்துள்ளதாக அவசர சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டோக்கியோவுக்கு தென்மேற்கே அமைந்துள்ள மிஷிமா (Mishima) நகரில் உள்ள இறப்பர் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த 15 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேர் கத்திக்குத்துக்கும், 7 பேர் தெளிக்கப்பட்ட மர்மத் திரவத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் ஊடகங்களின்படி, அந்தத் திரவம் 'ப்ளீச்' (Bleach) ஆக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் "அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள்" என வகைப்படுத்தப்பட்டுள்ள போதிலும், காயமடைந்த அனைவரும் சுயநினைவுடன் இருப்பதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 38 வயதான மசாகி ஒயாமா (Masaki Oyama) என்பவரைக் கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர் அந்தத் தொழிற்சாலையுடன் தொடர்புடைய ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது அவர் 'கேஸ் மாஸ்க்' (Gas Mask) எனப்படும் நச்சு வாயு தடுப்பு முகக்கவசம் அணிந்திருந்ததாகவும், கத்தி ஒன்றைப் பயன்படுத்தியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.