உக்ரைன் தலைநகரில் மீண்டும் அமுலுக்கு வந்த ஊரடங்கு! மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற தடை
உக்ரைன் தலைநகர் கீவ்-வில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் கிழமை காலை 7 மணி வரை என 35 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் புடினின் கனவு கானல் நீராகியுள்ளது என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இவ்வளவு பலத்த எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது வரும் என ரஷ்ய அதிபர் புடின் கனவு கூட கண்டிருக்க மாட்டார். அந்த அளவுக்கு ரஷிய படைகளுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் பலத்த எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன.
இழந்த நகரங்களை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட வேண்டும் என்று உக்ரைன் படைகள் முயற்சிப்பதாக இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் உக்ரைன் தலைநகர் கீவின் கிழக்கு பகுதியில் இழந்த நகரங்களையும், தற்காப்பு நிலைகளையும் உக்ரைன் படைகள் மீட்டெடுத்துள்ளதாகவும், வடமேற்கில் ரஷிய படைகள் வசப்படுத்திய பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டியடிப்பதில் வெற்றி கண்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது இதன் காரணமாக , ரஷிய படைகளின் தாக்குதலும் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் மீண்டும் 35 மணி நேரம் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குண்டு வீச்சில் இருந்து தப்பிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள ஷெல்டர்களுக்கு மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதி அளிக்கப்படுவார்கள் என்றும் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், பொது போக்குவரத்து ஆகியவை ஊரடங்கின் போது இயங்காது எனவும் கீவ் நகர மேயர் தெரிவித்துள்ளார்..