இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு அபாயம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இங்கிலாந்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Chandra புயலானது இங்கிலாந்தின் பெரும்பகுதியை பலத்த காற்று, கனமழை மற்றும் பனிப்பொழிவுடன் தாக்கியுள்ளது.

மஞ்சள் நிற எச்சரிக்கை
இந்த நிலையில் தேசிய வானிலை ஆய்வு நிலையம் சனிக்கிழமை (31) வரை நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் அதனால் உண்டாகும் அனர்த்தம் தொடர்பான மஞ்சள் நிற எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ளூர் நேரப்படி இன்று (30) காலை 9 மணி முதல் மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு நிலையம் முன்னதாக மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்த எச்சரிக்கை நாளை காலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வடக்கு அயர்லாந்தின் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை மற்றொரு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தவிர இங்கிலாந்து முழுவதும் பல வெள்ள எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ள நிலையில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வானிலை எச்சரிக்கைகள் நடைமுறையில் உள்ள பகுதிகளில் கார்ன்வால் (Cornwall), டெவோன் (Devon), பிளைமவுத் (Plymouth), சோமர்செட் (Somerset) மற்றும் டோர்பே (Torbay) மற்றும் வடக்கு அயர்லாந்தின் பகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.