தலாய் லாமாவுக்கு கிராமி விருது; சீனா கடும் விமர்சனம்
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது வழங்கப்பட்டநிலையில், அதனை சீனா கடுமையாக விமர்சித்துள்ளது.
1959-ம் ஆண்டு திபெத்திலிருந்து வெளியேறிய தலாய் லாமா, அதன் பின்னர் இந்தியாவின் தரம்சாலாவில் தங்கியிருந்து வருகிறார். திபெத்தின் விடுதலைக்காக அவர் மேற்கொண்ட அமைதியான, வன்முறையற்ற போராட்டங்களுக்காக 1989-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பிரிவினைவாத செயல்பாடுகளில் ஈடுபடும் அரசியல் அகதி
இந்நிலையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில், "சிறந்த ஆடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த பிரிவில் அமெரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ட்ரெவர் நோவா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.
எனினும் தலாய் லாமா இந்த விருதைத் தட்டிச் சென்றார். இந்த விருது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான்,
மதத்தின் பெயரில் தலாய் லாமா பிரிவினைவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டினார். “தலாய் லாமா ஒரு தூய்மையான மதத் தலைவர் அல்ல.
அவர் மதத்தை முகமூடியாகக் கொண்டு சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத செயல்பாடுகளில் ஈடுபடும் அரசியல் அகதி என கூறினார்.
மேலும் இந்த விருதை ஒரு கருவியாக பயன்படுத்தி சீனாவுக்கு எதிரான செயல்களை மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் சீனா கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் தெரிவித்தார்