ஷேக் ஹசீனாவின் முக்கிய உதவியாளர்கள் 7 பேருக்குத் தூக்குத் தண்டனை!
2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியை வன்முறை மூலம் ஒடுக்க முயன்ற வழக்கில், நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் முக்கிய உதவியாளர்கள் 7 பேருக்கு டாக்கா சிறப்பு தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட டாக்கா தீர்ப்பாயம் செவ்வாய்க்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கியது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை வழக்குகள் மற்றும் வன்முறையைத் தூண்டிவிட்டமை. அவாமி லீக் கட்சியின் பொதுச்செயலாளர் ஒபைதுல் காதர் மற்றும் முன்னாள் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முகமது அலி அராபத், ஏ.எஃப்.எம். பஹாவுதீன் நசீம், ஷேக் ஃபஸ்லே ஷாம்ஸ் பரஷ், மைனுல் ஹொசைன் கான் நிகில், சதாம் ஹுசைன் மற்றும் ஷேக் வாலி ஆசிஃப் இனான் ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் 5 பேரின் சொத்துக்களில் பாதியை அரசு உடனடியாகப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பணம், கிளர்ச்சியின் போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்த வன்முறை தொடர்பான வழக்குகளில் இதுவரை 68 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர்; அதில் 22 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், 4 பேர் மட்டுமே தற்போது காவலில் உள்ளனர்.
15 ஆண்டு கால ஆட்சியை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (78) கடந்த நவம்பர் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் தான் பங்களாதேஷ் திரும்பவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.