அமெரிக்கா செல்லும் கனேடியர்கள் குறைந்ததால் சுற்றுலா துறைக்கு பாதிப்பு
வர்த்தக மோதல்கள், மதிப்பிழந்த கனேடிய டாலர் மற்றும் அரசியல் விவாதங்கள் ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு அமெரிக்கா செல்லும் கனேடிய பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இதனால் இரு நாடுகளின் சுற்றுலா துறைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.
அமெரிக்கா செல்ல மக்கள் ஆர்வம் காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பிரபலமான தனது நியூயார்க் பயணங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டாவாவில் செயல்படும் Travac Tours நிறுவனத்தின் உரிமையாளர் கார்ல் கிள்ட்னர் தெரிவித்துள்ளார்.
"மக்கள் தற்போது அமெரிக்கா செல்ல விரும்பவில்லை. இடது, வலது எங்கு பார்த்தாலும் ரத்து செய்துகொண்டே இருக்கிறார்கள்," என தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் முக்கியமான அமெரிக்க சுற்றுலா திட்டமான நியூயார்க் பயணம், கடந்த ஆண்டுகளில் வருடத்திற்கு 25 முதல் 30 பேருந்துகள் வரை இயக்கப்பட்டன.
ஆனால் இந்த ஆண்டு ஒரு பயணமும் இல்லை. "இது மிகப்பெரிய இழப்பு. எங்கள் 53 வருட வரலாற்றில், கோவிட்-19 உடன் ஒப்பிடும் அளவுக்கு இது மிகப்பெரிய சரிவாக இருக்கிறது", என கிள்ட்னர் கூறினார்.
பயணிகள் குறைந்தது அமெரிக்க சுற்றுலா நிறுவனங்களுக்கும் கடுமையாக தாக்கமளித்துள்ளது. நியூயார்க் Spread Love Tours நிறுவன உரிமையாளர் மேட் லேவி, கனேடிய சுற்றுலாப் பயணிகள் குறைந்திருப்பதை "பேரழிவு" என விபரித்துள்ளார்.
"நான் 20 ஆண்டுகளாக சுற்றுலா வழிகாட்டியாகவும் நிறுவன உரிமையாளராகவும் இருக்கிறேன். எங்கள் நிறுவனத்தின் மாணவர் குழு சுற்றுலாக்களின் 30% முதல் 50% வரை கனேடியர்களாக இருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனேடியர்களின் அமெரிக்கப் பயணம் குறைவதால் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சில அமெரிக்க விமான நிறுவனங்கள் கனேடிய நகரங்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான விமான சேவைகளை குறைத்து விட்டன.
இதில் டொரண்டோ-லாஸ் ஏஞ்சல்ஸ் நேரடி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அமெரிக்காவில் இருந்து திரும்பிய கனேடியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 23% குறைந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.