கனடாவில் டிமென்டியா நோயாளர் எண்ணிக்கையில் உயர்வு
கனடாவில் டிமென்டியா அலல்த நினைவழிவு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலிய சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் தற்போது சுமார் 7.5 லட்சம் பேர் ஆல்ஷைமர் நோயுடன் (Alzheimer’s) வாழ்கிறார்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இது நினைவழிவு நோய்களின் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 2022ஆம் ஆண்டு கனடாவில் ஆல்ஷைமர் ஒன்பதாவது பெரிய மரண காரணமாக பதிவாகியுள்ளது.
கனடா பொது சுகாதார முகமை (PHAC) வெளியிட்ட தரவுகளின்படி, 2022 ஏப்ரல் – 2023 மார்ச் காலகட்டத்தில் 65 வயதுக்கு மேற்பட்ட 4.87 லட்சம் பேர் நினைவழிவுடன் வாழ்ந்துள்ளனர். அதில் 99,000 பேர் புதிதாக கண்டறியப்பட்டவர்கள்.
இருப்பினும், இது ஆல்ஷைமர் தவிர்ந்த பிற நினைவழிவு நோய்களை உள்ளடக்கவில்லை என்பதால் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பல முதியவர்கள் நினைவழிவுடன் வாழ்ந்தாலும், அவர்கள் பெரும்பாலும் இதயம் நோய், ஸ்ட்ரோக், நிமோனியா போன்ற பிற நோய்களால் இறக்கிறார்கள்” என பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் முதியோர் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜர் வோங், கூறியுள்ளார்.
நினைவழிவு நோயால் ஏற்படும் விழுதல்கள், எலும்பு முறிவுகள் கூட உயிரிழப்புக்கு வழிவகுக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கனடா ஆல்ஷைமர் சங்கத்தின் கணிப்பின்படி, 2030க்குள் கனடாவில் நினைவழிவு நோயாளிகள் 10 லட்சத்தை எட்டுவார்கள். தற்போது தினசரி 414 பேருக்கு இந்த நோய் கண்டறியப்படுகிறது.
2050க்குள் கனடாவில் மட்டும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் நினைவழிவுடன் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவழிவை நிறுத்தவும், மந்தப்படுத்தவும் மருந்து இல்லை” என டொரண்டோ பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் ஹோவர்ட் செர்ட்கோவ் தெரிவித்தார்.
வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நினைவழிவு பெருமளவில் தடுக்கப்படலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.