ஐரோப்பா விமான நிலையங்களில் சைபர் தாக்குதலால் தொடரும் பாதிப்பு
ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களில் செக்-இன் கணினி முறைமைகளை பாதித்த சைபர் தாக்குதலின் விளைவுகள் ஞாயிற்றுக்கிழமையிலும் தொடர்ந்தன.
பயணிகள் மேற்பட்ட விமான ரத்துகள், தாமதங்களை சந்திக்க வேண்டியிருந்தது. பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் திங்கட்கிழமை புறப்பட இருந்த 276 விமானங்களில் கிட்டத்தட்ட 140 விமானங்களை ரத்து செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனம் புதிய பாதுகாப்பான செக்-இன் முறைமை பதிப்பை வழங்க முடியாததால் இந்த நடவடிக்கை அவசியமானது என விமான நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதல், பெர்லின், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஹீத்ரோ விமான நிலையங்களில் செக்-இன் முறையை சீர்குலைத்தது.
பல இடங்களில் விமான நிலையப் பணியாளர்கள் கையேடு முறையில் போர்டிங் பாஸ் எழுதவும், லேப்டாப் மூலம் மாற்று முறையில் பணிகளை மேற்கொள்ளவும் வேண்டியிருந்தது.
இந்த தாக்குதல் கொலின்ஸ் எரோஸ்பேஸ் Collins Aerospace நிறுவனத்தின் செக்-இன் மற்றும் பையில் தாள்கள் அச்சிடும் மென்பொருளை பாதித்தது.
சைபர் தாக்குதல் தொடர்பான பிரச்சினை காரணமாக சில ஐரோப்பிய விமான நிலையங்களில் சிக்கல் ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சைபர் தாக்குதலில் விமானப் பாதுகாப்பு மற்றும் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாடு பாதிக்கப்படவில்லை என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் மூலம் பரவலான அச்சுறுத்தல் எதுவும் இல்லை எனவும், விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது எனவும் தெரிவித்துள்ளது. லண்டன் மற்றும் பெர்லின் விமான நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை சேவைகள் பெருமளவு சீரானாலும், பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இன்னும் கடும் சிக்கல்கள் தொடர்கின்றன.
சைபர் தாக்குதல் பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் தாமதங்கள், ரத்துகள் தொடரும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விமான நிலையங்கள், பயணிகள் தங்கள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் சரிபார்க்கவும், ஆன்லைன் செக்-இன், சுய சேவை செக்-இன் போன்ற மாற்று முறைகளை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளன.