வெளிநாட்டு மருத்துவர்களுக்கு கனடா வழங்கும் வாய்ப்பு
கனடா முழுவதும் கடுமையாக காணப்படும் மருத்துவர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், நாட்டில் தற்காலிக குடியிருப்பாளர்களாக பணியாற்றும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்குவதற்கு மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
குடியேற்ற அமைச்சர் லீனா தியாப் இந்த கொள்கை மாற்றத்தை அறிவித்தார்.
5,000 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட உள்ளதாகவும், இவர்கள் தற்போதைய குடியேற்ற அளவுக்கு மேல் சேர்க்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இந்த மருத்துவர்களில் பலர் ஏற்கனவே நமது சமூகங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர்களை இழக்க முடியாது லீனா தியாப் என தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு கனடாவில் பணியாற்றிய அனுபவம், தற்போது செல்லுபடி வேலை வாய்ப்பு (Job Offer) உள்ள மருத்துவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் குடும்ப மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை நிபுணர்கள், ஆய்வக மற்றும் கிளினிக்கல் மருத்துவ நிபுணர்கள் போன்ற வெளிநாட்டவர்கள் நன்மை அடைவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்கள் உரிமம் பெற்ற மருத்துவர்களை Express Entry வழியாக பரிந்துரைக்கலாம்
• இந்த பரிந்துரைகள் ஏற்கனவே உள்ள வருடாந்திர இடங்களுக்கு மேலதிகமாக வழங்கப்படும்
• பரிந்துரைக்கப்பட்ட மருத்துவர்களின் வேலை அனுமதி 14 நாட்களில் செயல்படுத்தப்படும் → நிரந்தர குடியுரிமை செயல்முறையுடன் இணைந்து மருத்துவருக்கு உடனடியாக பணியாற்ற வசதி செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.