ஈரானில் தொடரும் டிஜிட்டல் இருள் ; இரண்டாவது மாதமாக இணையத் தடை நீடிப்பு
ஈரானில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட நாடு தழுவிய இணையத் தடை தற்போது இரண்டாவது மாதத்தில் கால்பதித்துள்ளதாக இணையக் கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸ் (NetBlocks) தெரிவித்துள்ளதாக அல் ஜசீரா ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28-ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரான் அதிகாரிகள் சர்வதேச இணைய இணைப்பைத் துண்டித்தனர். தற்போது 30 நாட்களைக் கடந்து, 5-ஆவது வாரமாக இந்தத் தடை நீடிக்கிறது.

இதனால் சுமார் 9 கோடி ஈரானிய மக்கள் உலக நாடுகளுடனான தொடர்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெட்பிளாக்ஸ் அமைப்பின் தரவுகளின்படி, ஈரானில் தற்போது சாதாரண மக்களுக்கான இணைய இணைப்பு 1% என்ற மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.
எனினும், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட "வெள்ளைப்பட்டியலில்" (Whitelist) உள்ள முக்கிய நபர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர்.
போர் பதற்றம் நிலவும் சூழலில், இணையத் தடையால் மக்கள் அவசர காலத் தகவல்களைப் பெறுவதிலும், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் தொடர்புகொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, தரைவழித் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவும் வேளையில், இந்தத் தகவல் தொடர்பு முடக்கம் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.
ஈரான் ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டங்களின் போதும் பல வாரங்களுக்கு இணையத் தடையை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.