ஊரைவிட்டு வெளியேறும் மக்கள்: பிலிப்பைன்சில் நடந்தது என்ன?
கடைசியாக 2020 ஜனவரியில் தால் எரிமலை வெடித்து சிதறியபோது, 1.35 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரியதும், சிறியதுமான எரிமலைகள் உள்ளன. இதில் மிகவும் உயிர்ப்புடன் உள்ள எரிமலையான தால் எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் காணப்பட்டது.
தால் ஏரியில் அமைந்துள்ள இந்த எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் மற்றும் புகை காரணமாக, தலைநகரம் மணிலா மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் வானம் புகைமூட்டமாக காட்சியளித்தது. இது கடும் சுகாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், எரிமலையின் சீற்றம் இன்று மேலும் அதிகரித்து, வெடித்துச் சிதறியது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது.
ஊரை விட்டு பொதுமக்கள் வெளியேறியவண்ணம் உள்ளனர். ஏற்கனவே சிலர் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு, அரசின் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரியில் இந்த எரிமலை வெடித்து சிதறியது. அப்போது 15 கிமீ உயரத்திற்கு சாம்பல் பரவியதுடன், லாவா குழம்பும் வெளியேறியது.
இதில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. 1.35 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.