90 வினாடிகளில் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை ; பட்டப்பகலில் நடந்தேறிய சம்பவம்
அமெரிக்காவில் பட்டப்பகலில் நகைக் கடையில் நுழைந்த முகமூடி கும்பல், வெறும் 90 வினாடிகளில், 17.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர, தங்க நகைகளுடன், ஆடம்பர கைக்கடிகாரங்களையும் கொள்ளையடித்துச் சென்றது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் மேற்கு சியாட்டில் உள்ளது மெனாஷே சன்ஸ்' என்ற நகைக்கடை. இந்த கடையில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் ஊழியர்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
துணிகர கொள்ளை
அப்போது முகமூடி அணிந்தபடி நான்கு பேர் வந்தனர். அவர்கள், கரடி ஸ்ப்ரே, துப்பாக்கி போன்ற டேசர் எனப்படும் மின்னழுத்த ஆயுதத்தால் ஊழியர்களை தாக்கியுள்ளனர்.
இதில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. பின்னர் அங்கு ஒரு பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஆறரை கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ரோலக்ஸ்' கடிகாரங்களையும், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத நெக்லசையும் கொள்ளையடித்தனர். மேலும் அங்கிருந்த தங்க, வைர நகைகளையும் அள்ளிச் சென்றனர்.
பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளையை வெறும், 90 வினாடிகளில் கொள்ளையர்கள் அரங்கேற்றினர்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளது. அதனை வைத்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.