விஷ ஊசியால் பலரின் உயிரை பறித்த வைத்தியர் ; நீதிமன்றம் காட்டிய அதிரடி
பிரான்சின் பெசான்கான் நகரில் நோயாளிகளுக்கு விஷ ஊசி செலுத்தி, 12 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான பிரடெரிக் பெஷியர் என்ற மருத்துவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
குறித்த மருத்துவர் சத்திரசிகிச்சையின் போது நோயாளிகளுக்கு மயக்க மருந்து வழங்குவதற்குப் பதிலாக, பொட்டாசியம் குளோரைடு கலந்த விஷ ஊசியைச் செலுத்தியுள்ளார்.

திடீர் மாரடைப்பு
இதன் காரணமாக நோயாளிகளுக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்குத் தானாகவே மாரடைப்பை வரவழைத்துவிட்டு, பின்னர் அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளித்துக் காப்பாற்றுவது போல நடித்து, தன்னை ஒரு சிறந்த மருத்துவராகவும் 'கதாநாயகனாகவும்' காட்டிக்கொள்ள இவர் முயற்சி செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.
2008ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சுமார் 30 நோயாளிகளுக்கு இவர் இவ்வாறு விஷ ஊசி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் 12 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகப் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
நீண்டகாலமாக இடம்பெற்ற இந்த விசாரணையின் முடிவில், வேண்டுமென்றே விஷ ஊசி செலுத்திப் படுகொலை செய்த குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.