இரண்டு வயதுக்கு முன் சர்க்கரை கட்டுப்பாடு மூளை ஆரோக்கியத்திற்கு உதவுமா?
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சர்க்கரை உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது, அவர்களின் எதிர்கால மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதுடன், முதிய வயதில் டிமென்ஷியா (மறதி நோய்) ஏற்படும் அபாயத்தையும் குறைக்கக்கூடும் என புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐக்கிய இராச்சியத்தில் நடைமுறையில் இருந்த சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, சர்க்கரை நுகர்வு அதிகரித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1953 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னர், ஒருவரின் சராசரி தினசரி சர்க்கரை உட்கொள்ளல் 41 கிராமிலிருந்து 80 கிராமாக அதிகரித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

'யூகே பயோபேங்க்' (UK Biobank) திட்டத்தில் பங்கேற்ற சுமார் 65,000 பேரின் தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
ஆய்வில், இரண்டு வயதுக்கு முன்னர் சர்க்கரை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் வளர்ந்தவர்களுக்கு டிமென்ஷியா நோய் ஏற்படும் வாய்ப்பு 23 சதவீதம் குறைவாக இருந்ததாகவும், நோய் கண்டறியப்படுவதற்கான காலம் சராசரியாக இரண்டரை ஆண்டுகள் தாமதமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பது நீண்டகால அடிப்படையில் மூளை ஆரோக்கியத்திற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஜியாஜென் செங் (Jiazhen Zheng) தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தொடர்பை முழுமையாக உறுதிப்படுத்த மேலதிக ஆய்வுகள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இது ஒரு அவதானிப்பு ஆய்வு மட்டுமே என்பதால், குறைந்த அளவில் சர்க்கரை உட்கொள்வது நேரடியாக டிமென்ஷியாவைத் தடுக்கிறது என உறுதியாகக் கூற முடியாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆய்வில் பங்கேற்றவர்கள் உண்மையில் எவ்வளவு சர்க்கரை உட்கொண்டனர் என்பது தொடர்பான துல்லியமான தகவல்கள் கிடைக்கவில்லை என்றும், அவர்களின் பிறந்த காலம் மற்றும் சர்க்கரை விநியோகக் கட்டுப்பாட்டு நடைமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1940 மற்றும் 1950களில் பிறந்தவர்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆய்வு முடிவுகளை தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு நேரடியாகப் பொருத்திப் பார்ப்பதில் அவதானம் தேவை என வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இருப்பினும், மூளை ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு சமநிலையான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் முக்கியமானவை என்றும், நல்ல பழக்கங்களை ஆரம்பிப்பதற்கு எந்த வயதும் தாமதமில்லை என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.