டொன் ப்றட்மனின் பச்சை நிறத் தொப்பி பெரும் தொகைக்கு ஏலம்!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் விற்பன்னர் டொன் ப்றட்மனின் பச்சை நிற தொப்பி ஒன்று 479,700 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது. அந்தத் தொப்பி பூச்சிகளால் அரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சமகால அவுஸ்திரேலிய வீரர்களைப் போலல்லாமல் ப்றட்மனின் சகாப்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் ஒவ்வொரு தொடருக்கும் வெவ்வேறு தொப்பியை அணிந்தே விளையாடினர்.
மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக டொன் ப்றட்மன்
இதற்கு அமைய 1947-1948 கிரிக்கெட் பருவகாலத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ப்றட்மன் அணிந்து விளையாடிய தொப்பியே ஏலத்தில் சாதனைமிகு 479,700 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு விற்பனையாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 2019-20இல் காட்டுத்தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கு உதவும் வகையில் அவசர சேவைகள் நிவாரணத்திற்காக ஷேன் வோர்னின் தொப்பியை 1,007,500 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு கொமன்வெல்த் பாங்க் வாங்கியிருந்தது.
அந்த விலையிலும் பார்க்க அரைவாசி விலைக்கே டொன் ப்றட்மினின் தொப்பி விலைபோயுள்ளது. அதேவேளை டொன் ப்றட்மனின் பச்சை நிறத் தொப்பி ஏலத்தில் விற்பனையானது இது முதல் முறையல்ல.
கிரிக்கெட் வீரர்களில் ஷேன் வோர்னின் தொப்பியே ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையான சாதனையைக் கொண்டுள்ளது.
1928ஆம் ஆண்டு ப்றட்மன் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அணிந்திருந்த தொப்பி 92 வருடங்களுக்கு பின்னர் 2020ஆம் ஆண்டு 450,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு விற்பனையானது.
1948இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் அணிந்திருந்த தொப்பி 2003இல் 425,000 அவுஸ்திலிய டொலர்களுக்கு விற்பனையானதுடன் அதே தொப்பி 5 வருடங்கள் கழித்து 400,000 அவுஸ்திலியா டொலர்களுக்கு மீண்டும் விற்பனை செய்யப்ட்டது.
2001இல் தனது 92 வயதில் காலமான ப்றட்மன், 52 டெஸ்ட் போட்டிகளில் 6996 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார். அவரது சராசரி அசாத்தியமான 99.94ஆக இருக்கிறது.
மேலும் 147 வரட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இத்தகைய சாதனைமிகு சராசரியை எவருமே நெருங்கியதில்லை. இதன் காரணமாக கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வீரராக டொன் ப்றட்மன் போற்றி புகழப்படுகிறார்.