ஈராக்கிலிருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் ; ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்திற்கும், அணு பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் முரணான கடுமையான செயல் என பாதுகாப்பு சபை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக அணுமின் நிலையங்களை இலக்கு வைக்கும் தாக்குதல்கள் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் சபை எச்சரித்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பான தரப்பு அல்லது நாடு குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் எந்தவிதமான நேரடி குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
இதற்கிடையில், கடந்த வாரம் ஈராக் பகுதியிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அவற்றில் ஒரு ட்ரோன் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்காகக் கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், அணு நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக சர்வதேச அளவில் கவலைகளையும் எழுப்பியுள்ளது.