உடனடியாக வெளியேறுங்கள் ; தீவிர தாக்குதலுக்கு எச்சரிக்கை
உக்ரைன் தலைநகா் கீவ்வில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் அதிகார மையங்களைக் குறிவைத்து, வரும் நாள்களில் தீவிர வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படவுள்ளதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் போரின் மிகக் கடுமையான தாக்குதல்களில் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அரங்கேறிய நிலையில், கீவ் நகரில் தங்கியிருக்கும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட வெளிநாட்டினா் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

அண்மையில் ரஷ்ய பகுதியில் உள்ள மாணவா் விடுதியொன்றில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளாா்.
இருப்பினும், ரஷ்யாவின் இந்த எச்சரிக்கையை ‘வெறும் மிரட்டல்’ என்று உக்ரைன், ஐரோப்பிய யூனியன் நிராகரித்துள்ளன. உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹா கூறுகையில், ‘ரஷ்யாவின் இந்த மிரட்டலுக்குப் பயந்து உக்ரைனின் நட்பு நாடுகள் பின்வாங்கக் கூடாது என்று வலியுறுத்தினாா்.
இதேபோல், கீவ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் தூதரகக் குழுவின் தலைவா் கத்தரினா மாதொ்னோவா, ‘மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதே ரஷியாவின் நோக்கம். ஐரோப்பிய நாடுகள் கீவ் நகரை விட்டு எங்கும் செல்லாது; உக்ரைனுடன் தொடா்ந்து துணை நிற்கும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்தாா்.