தேர்தலில் இருந்து விலகிய இந்திய வம்சாவளி கனேடிய எம்.பி
ஒன்ராறியோவுக்கான லிபரல் கட்சி வேட்பாளர் ராஜ் சைனி தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
தனது முன்னாள் பெண் ஊழியரைத் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த முடிவை ராஜ் சைனி எடுத்துள்ளார். ஆனால் குறித்த குற்றச்சாட்டுகளை சைனி உறுதியாக மறுத்து வருகிறார்.
இது தொடர்பாக சனிக்கிழமை சைனி வெளியிட்ட அறிக்கையில், வருந்தச்செய்யும் இந்த முடிவை தாம் எடுக்க நேர்ந்ததாகவும், 44வது பாராளுமன்ற தேர்தலுக்கான பரப்புரைகளில் இருந்து தாம் விலகிக்கொள்வதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சாரத்தைத் தொடர்வது என்பது இனி எனது குடும்பம், பணியாளர்கள், பிரச்சாரக் குழு மற்றும் தொகுதி உறுப்பினர்களின் நலன்களுக்காகப் பயன்படாது என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அனைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக, 44 வது பாராளுமன்றத்திற்கான எனது பிரச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் இந்த வலிமிகுந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாடுகளை தாம் இனி சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.