சரேயில் $900,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்:
பிரிட்டிஷ் கொலம்பியாவின் சுரே பகுதியில், ஓப்பியம், ஹெராயின், பெண்டானில் மற்றும் கோகோயின் உள்ளிட்ட சுமார் 891,000 டாலர் மதிப்பிலான சட்டவிரோத போதைப்பொருட்களைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஒரு வெளிநாட்டு பிரஜை மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
அப்பகுதியில் நடந்து வந்த போதைப்பொருள் கடத்தல் குறித்து கடந்த நான்கு மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் முடிவில், மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டு இந்த போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுரே காவல் துறை அறிவித்துள்ளது.

சுரே பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புடன் தொடர்புடைய சில நபர்களுக்கும், பெண்டானில் போதைப்பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதை ஆதாரங்களுடன் கண்டறிந்ததையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் 'புராஜெக்ட் பாண்டம்' என்ற பெயரில் இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
குறிப்பிட்ட அந்த வீட்டில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது வெளிநாட்டு பிரஜைகளான அந்த மூன்று ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனையில் சுமார் 15.9 கிலோகிராம் ஓப்பியம், 1.53 கிலோகிராம் கஞ்சா, 559 கிராம் கோகோயின், 468 கிராம் பெண்டானில், 148 கிராம் மெத்தாம்பேட்டமைன் மற்றும் 35 கிராம் ஹெராயின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் சந்தை மதிப்பு 891,000 டொலர் என அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். அத்துடன் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் விநியோகப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் கைப்பற்றப்பட்ட பெண்டானில் போதைப்பொருளின் அளவு, சுமார் 23,400 பேரின் உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்தான அளவாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.