கனடாவில் போதைப் பொருள் குற்றங்கள் அதிகரிப்பு
கனடாவில் போதைப்பொருள் குற்றச்செயல்களில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
12 ஆண்டுகளில் முதன்முறையாக இவ்வாறு போதைப் பொருள் குற்றச் செயல்கள் உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரவத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த அளவு 2011 ஆம் ஆண்டில் பதிவான போதைப் பொருள் குற்றச் செயல்களை விடவும் 61 சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 2023 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் போதைப்பொருள் குற்றச்செயல் விகிதம் 13 சதவீதம் உயர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக கஞ்சா, கோகெய்ன் மற்றும் ஹெராயின் தவிர்ந்த பிற ஓப்பியாய்டு வகை போதைப்பொருட்களுடன் தொடர்புடைய கைப்பற்றல் மற்றும் கடத்தல் வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், 2024 ஆம் ஆண்டில் 100,000 பேருக்கு 128 வழக்குகள் என்ற அளவில் பதிவான போதைப்பொருள் குற்ற விகிதம், 2011 ஆம் ஆண்டில் பதிவான 330 வழக்குகளிலிருந்து குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தே உள்ளது.
இந்த அறிக்கை, கனடாவின் போதைப்பொருள் குற்றங்கள் குறித்து கடந்த ஒரு தசாப்தத்திற்கு பின் வெளிவந்த முக்கியமான மதிப்பீடு எனவும், கஞ்சா சட்டபூர்வமாக்கம் மற்றும் ஓப்பியாய்டு நெருக்கடி போன்ற முக்கிய மாற்றங்களுக்குப் பின்னர் இது வெளிவந்தது எனவும் குறிப்பிடுகிறது.
2018 ஆம் ஆண்டில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதிலிருந்து, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான பதிவுகளில் “கணிசமான மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        