கனடாவில் போதைப்பொருட்களுடன் 4 பேர் கைது
கனடாவின் தண்டர் பே பகுதியில் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 116,000 டொலர் மதிப்புள்ள சந்தேகிக்கப்படும் போதைப்பொருள்களும், 15,000 டொலர்களுக்கும் மேற்பட்ட பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த விசாரணையின் விளைவாக ஒன்டாரியோவைச் சேர்ந்த மூன்று பேரும் ஆல்பெர்டாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 18ம் திகதி பொலிஸார் பல இடங்களில் விசேட சோதனை நடத்தினர்.
முதலில், மேமோரியல் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு பார்க்கிங் லாட்டில் சந்தேக நபர்களில் இருவரை பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் தப்பிக்க முயற்சி செய்ததுடன், கையிலிருந்த செல்போனை அழிக்க முயன்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கம்பர்லேண்ட் ஸ்ட்ரீட் நார்த், மாசார் அவென்யூ, விண்சோர் ஸ்ட்ரீட், கிராஸ்போ ஸ்ட்ரீட் ஆகிய இடங்களில் உள்ள வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தினர்.அப்போது மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.
சோதனையின் போது போலீசார் கோகைன், கிராக் கோகைன், பென்டனில் உள்ளிட்ட போதைப்பொருட்களையும், ரொக்கப் பணத்தையும், போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட 61 வயது ஆல்பெர்டா நபர், 49 வயது மிசிசாகா நபர், 57 வயது தண்டர் பே நபர், 45 வயது தண்டர் பே பெண் ஆகியோருக்கு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று ஆண்களுக்கு குற்றம் மூலம் பெற்ற சொத்து வைத்திருக்கும் குற்றச்சாட்டும், பெண்மணிக்கு கூடுதலாக போதைப்பொருள் வைத்திருக்கும் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.