கனடா வேலைவாய்ப்பு சந்தையில் அதிரடி மாற்றம்
கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை நடப்பு ஆண்டு மே மாதத்தில் எதிர்பாராத விதமாக 88,000 புதிய வேலைகளை உருவாக்கி பலத்த மீட்சியைப் பெற்றுள்ளதாக கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட கடுமையான வேலைவாய்ப்பு சரிவை இந்த முன்னேற்றம் ஓரளவு ஈடுசெய்துள்ளது.
இதன் காரணமாக, நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்த 6.9 சதவீதத்திலிருந்து, மே மாதத்தில் 6.6 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த 2025 நவம்பருக்குப் பிறகு வேலைவாய்ப்புத்துறையில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய உயர்வு இதுவாகும். இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் கனடா பொருளாதாரம் சுமார் 1,12,000 நிகர வேலைகளை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நிபுணர்கள் மே மாதத்தில் வெறும் 10,000 வேலைகள் மட்டுமே உருவாகும் எனவும், வேலையின்மை விகிதத்தில் மாற்றம் இருக்காது எனவும் கணித்திருந்த நிலையில், இந்த அதிரடி வளர்ச்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.