வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா விதித்த கட்டுப்பாடுகளால் ஏற்பட்டுள்ள தாக்கம்
கனடா அரசு, வெளிநாட்டு மாணவர்கள் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது.
அதன் விளைவாக, கனடாவிலுள்ள பல கல்லூரிகளில் வெளிநாட்டு அல்லது சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வீடுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களை சந்திக்க கனேடியர்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டியுள்ளதாகவும், அதற்கு சர்வதேச மாணவர்களும் காரணம் என்றும் கூறி, கனடா அரசு கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது.
கடந்த ஆண்டு, கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பிப்பவர்களில் அங்கீகரிக்கப்படுவோர் எண்ணிக்கையை, 2024ஆம் ஆண்டில் 35 சதவிகிதமும், 2025இல் 10 சதவிகிதமும் குறைப்பதாகவும், இந்த நடவடிக்கை இரண்டு ஆண்டுகள் அமுலில் இருக்கும் என்றும் அறிவித்தது கனடா அரசு.
அதைத் தொடர்ந்து, கனடாவுக்கு கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.
இந்நிலையில், கனடாவிலுள்ள வீடுகளில் வாடகைக்கு வர போட்டியும் குறைந்தது. அதைத் தொடர்ந்து வீட்டு வாடகைகளும் குறைந்துள்ளன.
ஆக, கனடா எதிர்பார்த்ததுபோலவே, வெளிநாட்டு மாணவர்கள் மீது விதித்த கட்டுப்பாடுகள் வேலை செய்கின்றன எனலாம்.
ஆனால், வெளிநாட்டு மாணவர்கள் உள்நாட்டு மாணவர்களை விட அதிகம் கல்விக்கட்டணம் செலுத்திவந்தார்கள்.
தற்போது அவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அந்த விடயமும் கல்லூரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.