‘ஜி-7' நாடுகளுக்கு உலக தலைவர்கள் விடுத்துள்ள முக்கிய வலியுறுத்தல்
ஏழ்மையான நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஜி-7 நாடுகள் உதவ வேண்டுமென முன்னாள் அதிபர்கள், முன்னாள் பிரதமர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் வருகிற 11-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை ஜி-7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அதன் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி இத்தாலி, ஜப்பான், மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்நிலையில் உலகின் மிகவும் ஏழ்மையான நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு ஜி-7 நாடுகள் உதவ வேண்டுமென முன்னாள் அதிபர்கள், முன்னாள் பிரதமர்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட உலக தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்கள் டோனி பிளேர் மற்றும் கோர்டன் பிரவுன், முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அயர்லாந்து முன்னாள் அதிபர் மேரி ராபின்சன் மற்றும் 15 ஆப்பிரிக்க நாடுகளின் முன்னாள் தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதமொன்று ஜி-7 மாநாடு நடைபெறும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் ‘‘உலகளாவிய தடுப்பூசி முயற்சிக்கு 2 ஆண்டுகளில் 66 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.48 லட்சம் கோடி) தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த தொகையில் 3-ல் 2 பங்கை ஜி-7 நாடுகள் வழங்க வேண்டும். குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள் தடுப்பூசிகளை எளிதில் அணுக ஜி-7 மற்றும் ஜி-20 ஆகிவற்றின் ஆதரவு தொண்டு செயல் அல்ல.
மாறாக அது ஒவ்வொரு நாட்டின் மூலோபாய நலனுக்கானதாகும். மேலும் சர்வதேச நாணய நிதியம் கூற்றுப்படி இது வரலாற்றில் மிகச்சிறந்த பொது முதலீடாக இருக்கும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.