எரிசக்தி விநியோகத்தில் சிக்கல்? அதிர வைத்த ஈரானின் அறிவிப்பு
ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் அனைத்துக் கப்பல்களும் ஈரானின் ஒப்புதலையும், ஆவணங்களின் முழுமையான பரிசோதனையையும் கடந்தே செல்ல வேண்டும் என ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா அரபு சேவைக்கு (Al Jazeera Arabic) கருத்துத் தெரிவித்த ஈரான் அதிகாரி, ஈரானுடனான ஒப்பந்தம் மற்றும் கப்பல் ஆவணங்களின் விரிவான ஆய்வுக்குப் பின்னரே எந்தவொரு கப்பலும் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணம் செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

"ஈரானுக்குப் பகை நாடாகக் கருதப்படும் நாடுகளுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் எந்தவொரு கப்பலும் இதுவரை ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கவில்லை.
இனிவரும் காலங்களிலும் அத்தகைய கப்பல்கள் கடப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது" என்றும் அந்த அதிகாரி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்கள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை குறித்து ஈரான் விடுத்துள்ள இந்த அறிவிப்பு சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.