உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
2023 ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 160 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 339 ஓட்டங்களை பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 108 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 87 ஓட்டங்களையும், கிறிஸ் வோக்ஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
நெதர்லாந்து அணி சார்பில் பாஸ் டி லீடி 3 விக்கெட்டுகளையும், ஆர்யன் தத், லோகன் வான் பீயா ஆகியோர் தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் 340 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 37.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
நெதர்லாந்து அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக தேஜா நிடமானுரு ஆட்டமிழக்காமல் 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் மொயீன் அலி, அடில் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.