இங்கிலாந்து ராணிக்கும் அவரது கணவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் 99 வயதான அவரது கணவர் ஃபிலிப் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசியை பொது மக்களுக்குச் செலுத்த முதன் முதலில் அனுமதி வழங்கிய நாடு இங்கிலாந்து ஆகும். அங்கு கொரோனா முன்களப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தோருக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் 94 வயதான இங்கிலாந்து ராணி எலிசபெத் மற்றும் 99 வயதான அவரது கணவர் ஃபிலிப் ஆகியோருக்கு நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து ராணியின் விண்ட்சர் மாளிகையில் வைத்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், சந்தேகங்களை தவிர்ப்பதற்காக இந்த தகவலை உடனே வெளியிட இங்கிலாந்து ராணி உத்தரவிட்டதாகவும் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.