கனடாவில் சீரற்ற வானிலை குறித்து எச்சரிக்கை
கனடாவின் அட்ட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் கடற்கரைப் பகுதிகளில் கடுமையான மழை, காற்று, பனிப்புயல் மற்றும் வெள்ளம் போன்ற வானிலை அபாயங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை நியூஃபவுண்ட்லாந்து, பிரிட்டிஷ் கொலம்பியா, நுனாவுத் மற்றும் யூகோன் பகுதிகளைப் பாதிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
நியூஃபவுண்ட்லாந்தின் அவலான் தீபகற்பத்தின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் சனிக்கிழமை பிற்பகல் வரை 50 முதல் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இடி மின்னல் சேர்ந்து கனமழை ஏற்படலாம்; இதனால் திடீர் வெள்ளம் மற்றும் சாலைகளில் நீர் தேக்கம் ஏற்படலாம், என தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் தென்மேற்கு பகுதிகளில், குறிப்பாக வான்கூவர் தீவு, பிரேசர் கன்யான், ஹோ சவுண்ட் மற்றும் சன்ஷைன் கோஸ்ட் ஆகிய இடங்களில் 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் புயல் மற்றும் அதிகபட்சம் 140 மில்லிமீட்டர் வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காற்றால் மரக்கிளைகள் முறியலாம், மின்சாரம் துண்டிக்கப்படலாம், தளர்வான பொருட்கள் காற்றில் பறந்து சேதம் ஏற்படுத்தலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யூகோனின் ஆர்க்டிக் கடற்கரை கடல்சுழல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் நீர்மட்டம் சாதாரணத்தை விட 25 செ.மீ உயரம் ஏறக்கூடும் எனவும் கடலோரப் பகுதிகளில் மிதமான வெள்ள அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நுனாவுத் மாகாணத்தின் ரீலோட் பகுதியில் வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை வரை பனிப்புயல் மற்றும் 80 கிமீ வேக காற்று ஏற்படக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.